10 - பரிதிமாற் கலைஞர்மதுரை அருகே விளாச்சேரி ஊராட்சி எனும் ஊரில் கோவிந்த சிவன், இலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 1870ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் நாள் மகனாக இவர் பிறந்தார்.

இயற்பெயர் சூரியநாராயணன். தந்தையிடம் சமஸ்கிருதமும், மதுரை சபாபதி முதலியாரிடம் தமிழும் கற்றார். மதுரை உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்

இவர்,ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றியவர்.
இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சூரியநாராயணன் என்பது. பின்னாளில் சூரியநாராயண சாஸ்திரியர் என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட பற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.

இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும் இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். தமிழ்மொழியின் வரலாறு மற்றும் நாடகவியல் (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார். கலாவதி (1898), ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி, ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார். இராவ் பகதூர் சி வை தாமோதரம் பிள்ளியஅவர்களால் திராவிட சாஸ்திரி என சிறப்பிக்கப்பட்டார். தனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சபாபதி முதலியாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். 

தமிழக அரசு இவரது வாரிசுதார்19 பேருக்கு ரூபாய் 15 லட்சம் பரிவுத் தொகையாக அளித்து இவரது பதின்மூன்று நூல்களையும் 2006 டிசம்பர் 2ஆம் நாள் அன்று தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டன.
பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு:
 • ரூபாவதி
 • கலாவதி
 • மான விஜயம்
 • தனிப்பாசுரத் தொகை
 • பாவலர் விருந்து
 • மதிவாணன்
 • நாடகவியல்
 • தமிழ் வியாசங்கள்
 • தமிழ் மொழியின் வரலாறு.
 • சித்திரக்கவி விளக்கம்
 • சூர்ப்ப நகை - புராண நாடகம்

பதிப்பித்துள்ள நூல்கள்

 • சயம்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி (1898)
 • மகாலிங்கையர் எழுதிய இலக்கணச்சுருக்கம் (1898)
 • புகழேந்திப்புலவரின் நளவெண்பா (1899)
 • உத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் (1901)
 • தனிப்பாசுரத்தொகை (1901)

1903ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் நாள் தனது 33ஆவது வயதிலேயே அமரர் ஆனார்.

மதுரை மாவட்டம் விளாச்சேயில் பரிதிமாற் கலைஞர் பிறந்து, வாழ்ந்த இல்லத்தை, தமிழ்நாடு அரசு நினைவு இல்லமாக மாற்றி அமைத்தது.. ஆண்டுதோறும் அரசின் சார்பில், இவரது நினைவில்லத்தில் ஜூலைத் திங்கள் 6ஆம் நாளன்று பரிதிமாற் கலைஞரின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இவரைப் பற்றிய மேலும் சில சிறப்புகள்-

ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியின் உதவித் தொகையைப் பெற்று, சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை பயின்றார். தமிழ் மொழி, தத்துவத்தில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். தான் பயின்ற கல்லூரியில் தத்துவத் துறை ஆசிரியர் பணியை ஏற்காமல், குறைந்த சம்பளமாக இருந்தாலும் தமிழ்த் துறைப் பணியை விரும்பி ஏற்றார்.
 செந்தமிழ் நடையில் இவர் சுவைபட விவரிக்கும் ஆற்றலில் ஈர்க்கப்பட்டு, பிற துறை மாணவர்களும் இவரது வகுப்புக்கு வந்து ஆர்வத்துடன் பாடம் கேட்பார்கள். தமிழ் அறிவும் ஆர்வமும் கொண்ட மாணவர்களை தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்று, தொல்காப்பியம், நன்னூல், சைவ சமய சாத்திர நூல்களைக் கற்பித்தார்.
சென்னைச் செந்தமிழுரைச் சங்கத்தை நிறுவினார். கல்லூரித் தமிழ்ப் பாடங்களுக்கு உரை எழுதினார். மதுரையில் 4-ம் தமிழ்ச்சங்கம் நிறுவ முயற்சி மேற்கொண்டார்.
 தமிழை செம்மொழி என முதன்முதலில் மெய்ப்பித்தவர். குழந்தைகள் 12 வயது வரை தமிழிலேயே கல்வி கற்க வேண்டும் என்று முழங்கியவர். யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரனார் இவரது தமிழ்ப் புலமை, கவிபாடும் திறனைக் கண்டு ‘திராவிட சாஸ்திரி’ என்னும் பட்டத்தை வழங்கினார்.
 தனது தனிப்பாசுரத் தொகை என்ற நூலில், சூரியநாராயண சாஸ்திரியார் என்ற தனது வடமொழிப் பெயரை ‘பரிதிமாற்கலைஞர்’ என தமிழில் மாற்றிக்கொண்டார். பல்கலைக்கழகப் பட்ட வகுப்புகளில் தமிழை விலக்கி சமஸ்கிருதத்தைக் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது. இவரது எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது.
நாவல், உரைநடை நாடகம், செய்யுள் நாடகம், கவிதை நூல், ஆய்வுநூல், நாடக இலக்கண நூல் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். குமரகுருபரர் எழுதிய நீதிநெறி விளக்கத்தின் 51 பாடல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.
 பல தமிழ் அறிஞர்களின் வரலாற்றையும் எழுதியுள்ளார். சபாபதி முதலியாரின் திருக்குளந்தை வடிவேலன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப்பரணி, நளவெண்பா, பஞ்சதந்திரம் உட்பட 67 நூல்களைப் புதுப்பித்து வெளியிட்டார்.
ஞானபோதினி, விவேகசிந்தாமணி இதழ்களில் தான் எழுதிய கட்டுரைகளை தொகுத்து ‘தமிழ் வியாசங்கள்’ என்ற பெயரில் வெளியிட்டார். 
 தமிழ்-தமிழர் முன்னேற்றத்துக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர் 1903-ல் மறைந்தார். ‘‘33 ஆண்டுகளே வாழ்ந்த இவர் அரிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இவர் அதிக காலம் வாழ்ந்திருந்தால், தமிழ் அன்னை அரியாசனத்தில் அமர்ந்திருப்பாள்’’ என தமிழ்த் தென்றல் திரு.வி.க. இவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்

Comments

Popular posts from this blog

13 - செய்குத்தம்பி பாவலர்

1 - சிவஞான முனிவர்

15 - வ.உ.சிதம்பரம் பிள்ளை (வ உ சி)