8 - மறைமலை அடிகள்




மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம்.1876ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் நாள் திருக்கழுக்குன்றத்தில் பிறந்தார்

புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். 

இவர் தந்தையார் சொக்கநாதபிள்ளை, தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவர் தம்முடை பிள்ளைகள் திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப்பெயர்களைத், திருஞான சம்பந்தம்: அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் : மணிமொழி, சுந்தரமூர்த்தி: அழகுரு, , திரிபுரசுந்தரி : முந்நகரழகி எனத் தனித்தமிழாக்கினார்.

தன்னுடன் சிறுவயது முதல் பழகிய செளந்திர வள்ளியம்மை என்ற பெண்ணை, மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 7 குழந்தைகள் பிறந்தன. தன்னுடைய 22-வது வயதில் கடும்சூலை நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது, திருவொற்றியூர் முருகன் மீது பக்திகொண்டு, ‘மும்மணிக் கோவை’ பாடினார். அதன் பயனாக, முருகப் பெருமான் அவர் நோயைக் குணமாக்கினார். ‘மும்மணிக் கோவை’யில் உள்ள புலவராற்றுப் படை என்னும் பாடல் நீண்ட ஆசிரியப்பாவால் ஆனது.


மறைமலைஅடிகள், நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால்,நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். 'சைவ சித்தாந்த சண்டமாருதம்' என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.

மறைமலை அடிகள், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றுவதற்்காக அந்தக் கல்லூரியில் பணிபுரிந்த பரிதிமாற்கலைஞரைச் சந்திக்கச் சென்றார். அப்போது அவர், ‘‘குற்றியலுகரத்துக்கு எடுத்துக்காட்டு சொல்லுங்கள்’’ என்று கேள்வி கேட்டார். ‘‘அஃது எனக்குத் தெரியாது’’ என்றார் மறைமலை அடிகள். ‘‘நீங்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள்’’ என்றார் பரிதிமாற்கலைஞர். ‘‘தெரியாது’’ என்று சொல்பவரை, ‘‘எப்படித் தேர்வு செய்யலாம்’’ என்று மற்ற உறுப்பினர்கள் கேட்டபோது, ‘‘ ‘அஃது’ என்பது, ஆயுதத் தொடர் குற்றியலுகரம். ‘எனக்கு’ என்பது, வன்தொடர்க் குற்றியலுகரம். ‘தெரியாது’ என்பது, உயிர்த்தொடர் குற்றியலுகரம்’’ என்று பதிலளித்தார் பரிதிமாற்கலைஞர். 
 பின்னர்க் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.1905 இல் சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி22.04.1912-இல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் “பொதுநிலைக் கழகம் “ எனப் பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். மணிமொழி நூல்நிலையம் என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார்.

‘‘அடிகளே தென்னாடு... தென்னாடே அடிகள்’’ என்று தமிழ்த்தென்றல் திரு.வி.க-வால் புகழப்பட்ட மறைமலை அடிகள், தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை பெற்றவர். 4 ஆயிரம் நூல்களுடன் தன் வீட்டிலேயே நூலகம் ஒன்றை அமைத்தவர்; தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகக் கொண்டவர்

என் புத்தகங்களை மொத்தமாகப் படித்தால்... ஒருவர் தமிழின் சுவையை அறியலாம்’’ என்று துணிச்சலாய்ச் சொன்னவர் மறைமலை அடிகள்.  


‘‘பெற்றதாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும்;
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரைமேவிய உடல் மறந்தாலும்;
கற்ற நெஞ்சம் கலைமறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்;
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே!’’''
- என்கிற பாடலை இவரது மகள் நீலாம்பிகை பாட... தந்தை வேதாச்சலம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பாடல் அவரை நெருடியதால், ‘‘நீலா... இனிமையான இந்தத் தமிழ்ப் பாட்டில் ஒரே ஒரு சமஸ்கிருதச் சொல் இருக்கிறது. ‘உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்’ என்ற இடத்தில் ‘தேகம்’ என்பதை நீக்கிவிட்டு, ‘உடம்பாகிய யாக்கை’ என்று போட்டால் ஓசை இன்பம் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குன்றுகிறது’’ என்றார் வேதாச்சலம்.
‘‘அப்படியானால் நாம் பிறமொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்’’ என்று 13 வயதே ஆன மகள் நீலாம்பிகை சொல்ல... அன்றுமுதல் தனித்தமிழ் இயக்கத்துக்கான விதையை மண்ணில் விதைத்தார் சாமி வேதாச்சலம். தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் தினந்தோறும் நாட்குறிப்பாக எழுதிவைத்தவர் மறைமலை அடிகள். இவை, ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளன. ‘‘என் நினைவு, பேச்சு, எழுத்து யாவும் தமிழாக உள்ளன. ஆங்கிலத்தில் எனக்குள்ள பயிற்சிக்குத் தொடர்பு வேண்டுமல்லவா, அதற்காக ஆங்கிலத்தில் எழுதுகிறேன்’’ என்று விளக்கம் அளிக்கும் அளவுக்கு ஆங்கில அறிவு படைத்தவர். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் மீதான வெறுப்பால், அறியாமையால் தோன்றியது அல்ல... அவருடைய தனித்தமிழ் இயக்கம். தமிழ் மீதான தணியாத காதலால் மலர்ந்தது.
‘‘எல்லா உறுப்புகளும் அமைந்த அழகான ஓர் உடம்பில் அந்த உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அந்த உறுப்புகளைப்போல் செய்து அவற்றை அதற்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கிறது... தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது’’ என்று தமிழுக்கு விளக்கம் கொடுத்தார் மறைமலை அடிகள்.

ஆங்கிலமும், சமஸ்கிருதமும் கட்டாயம் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடத்தை விருப்பப்பாடமாக கற்றால் போதும்’ என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது, 11 ஆண்டு காலம் பணியில் இருந்த மறைமலை அடிகளார், அதை எதிர்த்துத் தன்னுடைய பணியில் இருந்து விலகினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள், அதிலிருந்து தமிழை மீட்க முடிவெடுத்தார். வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பிவிட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அதற்கு ஒரு முன்னுதாரணமாகச் செயல்படவும் தொடங்கினார். 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக் காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பல வடமொழிச் சொற்கள் வழக்கொழிந்துபோயின. .

முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை போன்ற நூல்களுக்கு எளிய முறையில் தமிழில் உரை எழுதினார். வடமொழியில் காளிதாசன் படைத்த, ‘சாகுந்தலம்’ எனும் காவியத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். இதைப் படித்த காஞ்சி மடாதிபதி சந்திரசேகர ஸ்வாமிகள், ‘‘இதுபற்றி சிறந்த கட்டுரை எழுதும் மாணவர்களுக்கு ரூ.100 பரிசு தரப்படும்’’ என்று 1957-ல் அறிவித்தார். மகா பெரியவரையே மயக்கிய நூல் அது.

மொழிக்கலப்பு தமிழ் மொழிக்குப் பாதிப்பாக அமையும் என்று நம்பிய அவர், தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இந்தி மொழி தடையாக இருக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்தினார். 1937-ல், இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டபோது, சென்னை சைதாப்பேட்டையில் நடந்த இந்தி எதிர்ப்பு மாநாட்டுக்கு மறைமலை அடிகளே தலைமை தாங்கினார். ‘இந்தி பொது மொழியா?’ எனப் புத்தகம் எழுதினார். அதன் பொருட்டு நடந்த மறியலில் மகன் மறை திருநாவுக்கரசு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவருடைய தாய் தடுத்தார். ‘‘தமிழ் காக்க நாம் அல்லவா சிறை அனுப்ப வேண்டும். வேலை போய்விட்டால் என்ன, வேறு வேலை கிடைக்காமலா போய்விடும்? சிவபெருமான் கைவிட மாட்டார்’’ என்று அனுப்பிவைத்தார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்றார். ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ‘‘ஆங்கில மொழியில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம்’’ என்றார்.
இலக்கியம், மறைபொருளியல், மருத்துவம், சங்க இலக்கிய ஆய்வு, புதினம், பாடல், நாடகம், கடிதம், கட்டுரை, தத்துவம், வரலாறு, சமூகவியல் எனப் பலவகைகளில் 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழுலகுக்கு அளித்துள்ளார். சைவச் சித்தாந்த கொள்கை நெறி குறித்து கேள்வி எழுந்தபோது, ‘‘சைவத் திருமறைகள் 12-ம், மெய்க்கண்ட நூல்கள் 14-ம் அவற்றுக்கு மாறுபடாமல் அவற்றைத் தழுவிச் செல்லும் ஏனைய பிற நூல்களுமே சைவச் சித்தாந்த அடிப்படை முதன்மை நூல்களாக விளங்குகின்றன’’ என்று மறைமலை அடிகளார் தெரிவித்துள்ளார்.

இவரின் நூல்கள்

    • பொருந்தும் உணவும் பொருந்தா உணவும் (1921)
    • மக்கள் நூறாண்டு உயிர்வாழ்க்கை, இரு தொகுதிகள் (1933)
    • மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி (1927)
    • யோக நித்திரை: அறிதுயில் (1922)
    • தொலைவில் உணர்தல் (1935)
    • மரணத்தின்பின் மனிதர் நிலை (1911)
    • சாகுந்தல நாடகம் (சமசுகிருதத்தில் இருந்து மொழி பெயர்த்தது) (1907)
    • சாகுந்தல நாடக ஆராய்ச்சி (1934)
    • ஞானசாகரம் மாதிகை (1902)
    • Oriental Mystic Myna Bimonthly (1908-1909)
    • Ocean of wisdom, Bimonthly(1935)
    • Ancient and Modern Tamil Poets (1937)
    • முற்கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் (1936)
    • முல்லைப்பாட்டு- ஆராய்ச்சியுரை (1903)
    • பட்டினப்பாலை-ஆராய்ச்சியுரை (1906)
    • சாதி வேற்றுமையும் போலிச் சைவரும் (1911)
    • முதற்குறள் வாத நிராகரணம் (1898)
    • திருக்குறள் ஆராய்ச்சி (1951)
    • முனிமொழிப்ப்ரகாசிகை (1899)
    • மறைமலையடிகள் பாமணிக் கோவை (பாடல்கள்) (1977)
    • அம்பிகாபதி அமராவதி (நாடகம்) (1954)
    • கோகிலாம்பாள் கடிதங்கள் (புதினம்) (1921)
    • குமுதவல்லி: அல்லது நாகநாட்டரசி (புதினம்) (1911)
    • மறைமலை அடிகள் கடிதங்கள் (1957)
    • அறிவுரைக் கொத்து (1921)
    • அறிவுரைக் கோவை (1971)
    • உரைமணிக் கோவை (1972)
    • கருத்தோவியம் (1976)
    • சிந்தனைக் கட்டுரைகள் (1908)
    • சிறுவற்கான செந்தமிழ் (1934)
    • இளைஞர்க்கான இன்றமிழ் (1957)
    • திருவொற்றி முருகர் மும்மணிக்கோவை (1900)
    • மாணிக்க வாசகர் மாட்சி (1935)
    • மாணிக்க வாசகர் வரலாறும் காலமும் (இரு தொகுதி) (1930)
    • மாணிக்க வாசகர் வரலாறு (1952)
    • சோமசுந்தரக் காஞ்சியாக்கம் (1901)
    • சோமசுந்தர நாயகர் வரலாறு (1957)
    • கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா (1968)
    • திருவாசக விரிவுரை (1940)
    • சித்தாந்த ஞான போதம், சதமணிக்கோவை குறிப்புரை (1898)
    • துகளறு போதம், உரை (1898)
    • வேதாந்த மத விசாரம் (1899)
    • வேத சிவாகமப் பிராமண்யம் (1900)
    • Saiva Siddhanta as a Philosophy of Practical Knowledge (1940)
    • சைவ சித்தாந்த ஞானபோதம் (1906)
    • சிவஞான போத ஆராய்ச்சி (1958)
    • Can Hindi be a lingua Franca of India? (1969)
    • இந்தி பொது மொழியா ? (1937)
    • Tamilian and Aryan form of Marriage (1936)
    • தமிழ் நாட்டவரும், மேல்நாட்டவரும் (1936)
    • பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம் (1958)
    • வேளாளர் நாகரிகம் (1923)
    • தமிழர் மதம் (1941)
    • பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும் (1906)
    ஆகிய 54 நூல்களை எழுதியுள்ளார

    1950 செப்டெம்பர் மாதம் 15ஆம் நாள் அமரர் ஆனார்

    Comments

    Popular posts from this blog

    1 - சிவஞான முனிவர்

    13 - செய்குத்தம்பி பாவலர்